கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்கத்தின் 26ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள், தியானலிங்கத்தில் ஈஷா பிரம்மச்சாரிகளின் “ஆஉம் நமசிவாய” மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடகம்’ எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.
கிருத்தவ பக்தி, சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் ‘தேவார பதிகங்களை’ மயிலை சத்குரு நாதன், ‘ருத்ர-சமக வேத பாராயணத்தை’ சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். ‘செரா மே’ என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் ‘புத்த மந்திர உச்சாடனம்’ மற்றும் ‘இஷால் முராத்தின்’ இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.
குருத்வாரா சிங் சபா சார்பில் ‘குருபானி பாடல்கள்’, சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், ‘நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் ‘சூஃபி பாடல்கள்’ மற்றும் ‘ஏடாகூடம் இசைக்குழு’வின் சார்பில் ‘கிருத்தவ பக்தி பாடல்களும்’ பாடப்பட்டன.
சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ‘தீட்சை’ எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை, இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன.