ரஷ்யாவில் வரும் அக்., 12 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ள இளைஞர் பரிமாற்ற திட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்க கோவை சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி என்.சி.சி., மாணவர் ஜெரோம் வசந்தராஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இளைஞர்களிடையே கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு இடையேயான நட்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இளைஞர்களின் தலைமைத்துவம், ஒழுக்கம், கலாசார பரிமாற்றம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் திறனை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஜெரோம் வசந்தராஜ், 2026ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலாசார நிகழ்ச்சியின் கீழ் பங்கேற்றிருந்தார். என்.சி.சி., செயல்பாடுகளில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ரஷ்ய இளைஞர் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்க அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.