உணவு என்பது மனித வாழ்வின் அடிப்படையான தேவையாகும். மனிதன் உழைப்பதற்கு முக்கிய காரணம் உணவு. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. தினமும் பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் மற்றும் தெருக்களில் ஒரு வேளை உணவுக்காக யாசிக்கும் நிலையை காண முடிகிறது.

உலகப் பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகத்தில் சுமார் 80 கோடி பேர் பட்டினியில் வாழ்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாக போர், உள்நாட்டு குழப்பங்கள், பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள், பெருந்தொற்றுகள், மற்றும் உணவுப் பங்கீட்டில் உள்ள தவறுகள் குறிப்பிடப்படுகின்றன.

உணவு மற்றும் பொருளாதார வளங்கள் சிலரிடமே குவிந்து காணப்படுவதால், வறுமை மற்றும் பட்டினி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக பசி தினம் என்பது முதன்முதலில் தி ஹங்கர் என்ற திட்டம் மூலம் நிறுவப்பட்டது. பின்பு அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் மே 28ஆம் தேதியை உலக நாடுகள் பட்டினி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக அனுசரிக்கத் தொடங்கியுள்ளன.

ஊட்டசத்து மிக்க உணவின்றி லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், இதற்கெதிராக, ஒவ்வொரு ஆண்டும் 70 மில்லியன் டன் உணவு வீணாகின்றது என 2021ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உணவு கிடைப்பதில் சமநிலையின்றி பட்டினியால் உயிர் விடுபவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உலகப் பட்டினி தினம் நோக்கமாக கொண்டுள்ளது.