கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், 165 ஏக்கரில் உலகத் தரத்தில் உருவாகும் செம்மொழிப் பூங்கா பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 45 ஏக்கரில் ₹167.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற 22 விதமான தோட்டங்கள், தாவரவியல் பூங்கா, சிற்பங்கள், அடையாளங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் ரூ.93.44 கோடி செலவில் உருவாக்கப்படுகின்றன. அதேபோல், ரூ.25.56 கோடியில் 1,000 பேர் அமரக்கூடிய மாநாட்டு மையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தளவாடங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.7.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பூங்கா செடிகளுக்கு நீர்வழங்க, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் நீர் கொண்டு செல்லும் பணிகள் ரூ.7.83 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. தரைதள வாகன நிறுத்தத்திற்கும், மழைநீர் வடிகால், மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகளுக்கும் ரூ.26.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செம்மொழிப் பூங்கா, இந்தியாவில் முதல் முறையாக உலகத் தரத்திலான தோட்டக்கலை அம்சங்களை ஒரே இடத்தில் கொண்டுள்ளதுடன், பார்வையாளர்களுக்காக இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளி அரங்கம், இயற்கை உணவகம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. கோவை நகரின் முக்கிய அடையாளமாக உருவாகும் இந்த பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக்கும், பசுமை பராமரிப்புக்கும், மொழியியல் பாரம்பரியத்திற்கும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.