கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் மீண்டும் முக்கிய பயணிகள் ரயில்களை நிறுத்துமாறு சிங்காநல்லூர் ரயில் பயணிகள் நலச் சங்கம், தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சேலம் செல்லும் மெமு ரயில் சேவை, கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்கள் 16322/16321) மற்றும் பாலக்காடு டவுன்-திருச்சிராப்பள்ளி ரயில் (எண் 16844) ஆகிய ரயில்கள் முன்பு சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் தினசரி பயணிகள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், மாணவர்கள் மற்றும் சிங்காநல்லூர் பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு பயணிக்கும் பக்தர்கள் பயனடைந்தனர்.

ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்த ரயில்கள் இங்கு நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.  எனவே, தாமதமின்றி மெமு ரயில் சேவையையும், சிங்காநல்லூரில் முன்னர் நிறுத்தப்பட்ட ரயில்களையும் மீண்டும் நிறுத்துமாறு ரயில்வே துறையிடம் சிங்காநல்லூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரயில்கள் நிற்காததால், உள்ளூர்வாசிகள் காலை மற்றும் மாலை நடைப்பயணத்திற்கு நடைமேடையைப் பயன்படுத்துகின்றனர்.

சங்கத்தின் இணைச் செயலாளர் கணேசன் கூறுகையில்: கொரோனா தொற்றுக்குப் பிறகு ரயில்கள் இங்கு நிறுத்தப்படுவது திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, பயணிகள்  சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சிங்காநல்லூர் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பகுதி. இந்த ரயில்களை மீண்டும் சிங்காநல்லூரில் நிறுத்துவது, பயணிகள் மற்ற பகுதிகளுக்குச் செல்வதை எளிமையாக்கும். கோயம்புத்தூர் சந்திப்பில் பயணிகள் கூட்டம் குறையும் எனக் கூறினார்.