கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் செந்தில் பாலாஜி, தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 வட்டங்களில் ஆறு வட்டங்களில் இன்றுடன் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்து உள்ளார்.
இன்று தனது பிரச்சாரத்திற்கு நடுவே அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னதாக அவர் பேசுகையில், கோவை தெற்கு தொகுதியில் இன்னும் ஐந்து வட்டங்களில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்கள் நடைபெற வேண்டி உள்ளது. அதை அடுத்த ஐந்து நாட்களில் நிறைவு செய்வோம் என்று கூறினார்.
இதுபோல பிரச்சாரம் செல்லுகின்ற இடங்களில் சில அடிப்படை வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய செந்தில் பாலாஜி, சில இடங்களில் சமுதாயக்கூடம், பட்டா போன்ற அடிப்படை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் என கூறினார். இது அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு வருவதாக கூறிய அவர், திராவிட மாடல் அரசு அமைந்ததும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு உறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
“உங்கள் பிரச்சாரத்தின் போது திட்டங்களை சொல்கிறீர்கள், ஆனால் எதிர்க்கட்சியை தாக்கி விமர்சனம் செய்யாமல் பரப்புரை செய்வது ஏதாவது யுக்தியா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நான் இதுவரை 5 தேர்தலில் போட்டியிட்டு, ஐந்திலும் வெற்றி பெற்று தற்போது 6வது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறேன். இதுவரை என்னுடைய பழக்கம் என்பது எதிர்க்கட்சியினுடைய வேட்பாளர்களை பற்றியோ, அவர்களின் விமர்சனங்களை முன்வைத்தோ பேசுவது கிடையாது. நாங்கள் என்ன செய்வோம், என்ன செய்திருக்கிறோம், எங்கள் முதலமைச்சர் என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்வார் என்பதை சொல்லித்தான் வாக்கு கேட்கிறோம். அது மக்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கும், அந்த நம்பிக்கையை பெற்று வாக்குகளை பெறுவது என்னுடைய கடமை. அதை நான் ஆரம்பத்தில் செய்கிறேன், அதை தொடர்ந்து செய்வேன். தனிப்பட்ட, மட்டரகமான விமர்சனங்கள் என்னிடம் இருக்காது,” என கூறினார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தும் அவர்கள் பரப்புரையில் தொய்வு ஏதும் இருக்கிறதா என்று திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி உள்ளதால் அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் (காங்கிரஸ்) வேட்பாளர்களை அறிவித்தார்கள். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இன்று பிரச்சாரத்தை துவங்கி இருக்கிறார்கள். எனவே அங்கு எந்த தொய்வும் கிடையாது என தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக வேட்பாளர் மக்களை சந்திக்கும் போது, மத்திய அரசு மூலம் கோவைக்கு என்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதைச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும் எனக் கூறினார்.
ஒரு நியாயமான வாக்கு சேகரிப்பு என்பது மக்களுக்கு என்ன திட்டங்களை வழங்கினோம் என்பதை கூறுவதாக இருக்க வேண்டும்.
கோவைக்கு எதையுமே செய்யாதவர்கள், மெட்ரோ திட்டத்தை புறக்கணித்தவர்கள், கோவையினுடைய வளர்ச்சிக்கு என்ன அக்கறை செலுத்த போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.
“பி.ஜே.பி அரசாங்கம் அமைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது? இத்தனை ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்பு திட்டங்களை கொடுத்திருக்கிறார்கள்?” என கேள்விகளை எழுப்பினார்.

