எந்தத் துறையில் ஆர்வமோ அந்த பிரிவில் சேருங்கள் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பிரிவுகளை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
சென்னை தண்டையார்பேட்டையில் நேதாஜி நகரில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் தைக்கா அரங்கில் அறம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் முகமது நாசர் தலைமை தாங்கினார். மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் எம்.கே.இ.உமர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த பகுதியைச் சார்ந்த பிரமுகர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் விஸ்டம் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி மற்றும் கல்வி ஆலோசகரான சித்திக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றும் போது, உறவினர்களும் நண்பர்களும் சொல்லுகிறார்கள் என்பதற்காகவோ நண்பர்கள் ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்டார்கள் என்பதற்காகவோ கல்லூரியை தேர்ந்தெடுக்காதீர்கள்.
உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ எந்தத் துறையில் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையும் திறனும் இருக்கிறதோ அந்த துறையைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஒவ்வொரு சமூகத்துக்கும் அவசியம். காரணம் கல்வி மட்டும் தான் ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும். தாழ்ந்து கிடக்கிற நிலையில் இருந்தும், ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்வி அவசியம்.
கல்வியும் ஒழுக்கமும் மட்டுமே ஒருவரது முன்னேற்றத்தில் முக்கிய காரணிகளாக இருக்கும்.
படிப்பு எவ்வளவு முக்கியமோ அதற்கு சமமாக ஏன் அதையும் விட உயர்வாக ஒழுக்கமும் முக்கியம். அதனால்தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிரை விட மேலானது என்று சொல்லி இருக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் விருப்பமுள்ள பாடங்களில் படிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். மற்றவர்கள் அது படிக்கிறார்கள், இது படிக்கிறார்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது.
இன்றைக்கு நிறைய பாடப்பிரிவுகள் உள்ளன. கலை அறிவியல் கல்லூரிகளில் பிஏ அல்லது பிஎஸ்சி படித்தவர்கள் தொடர்ந்து மேற்படிப்பு படித்தால் ஆசிரியர் பணிக்கு சேரலாம். அல்லது தமிழ்நாடு அரசுப் பணிகளிலும், மத்திய அரசின் வேலைக்கான தேர்வுகளும் எழுதலாம்.
ஐஏஎஸ் போன்ற அரசுத் தேர்வுகளுக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தான் தகுதி நிர்ணயித்திருக்கிறார்கள்.
அதேபோல பொறியியல் பாடப்பிரிவுகளில் பிஇ. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளோடு புதிதாக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
அதைப் போலவே நீட் தேர்வு எழுதாமல் துணை மருத்துவ படிப்புகள் பி.ஃபார்ம், நர்சிங், லேப் டெக்னாலஜி, ரேடியோலோஜி, பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புகள் உலக அளவில் வேலை வாய்ப்பு வழங்க கூடியவையாக உள்ளன.
பிகாம் படித்து சிஏ தேர்வு எழுதி ஆடிட்டர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சட்டக் கல்லூரி படித்தவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசு வழக்கறிஞராகவும், நீதிபதிகளாகவும், தனியார் துறைகளில் சட்ட ஆலோசகர் மற்றும் சட்ட வல்லுனர்களாக பணியாற்றுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
குறைந்த மதிப்பெண் பெற்றவர்களோ அல்லது தேர்வு பெறாதவர்களோ அதோடு வாழ்க்கை முடிந்துவிட்டதாக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக துணைத்தேர்வுகள் எழுதலாம்.
மேலம் திறன் சார்ந்த எலக்ட்ரிகல், ஃபிட்டர், வெல்டிங், பிலம்பர், போன்ற ஐடிஐ படித்த இளைஞர்களுக்கும் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
கல்லூரியில் படிக்கிற காலத்தில் நல்ல புத்தகங்களை படிக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆண்களோ அல்லது பெண்களோ யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வெற்றி அடைவார்கள் என்று பேசினார்.
இறுதியாக எஸ்.எம்.ஹெச். எஸ். பள்ளியின் பொருளாளர் முகமது இப்றாஹீம் நன்றி கூறினார்.
