கோவை மாநகரின் 5 மண்டலங்களில் 3000த்துக்கும் அதிகமான சாலைகளை மேம்படுத்த வேண்டி, அரசு ரூ.200 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. இந்த நிதியின் மூலம் என்னென்ன முன்னேற்றங்கள் கோவை மாநகரில் நடைபெற்றுள்ளது என்பது பற்றி மாநகராட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 503.67 கி.மீ. நீளத்திற்கு 3,456 மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 3,367 பணிகள் (487.91 கி.மீட்டர்) முடிக்கப்பட்டு, மீதமுள்ள 89 சாலைப் பணிகள் (16.83 கி.மீட்டர்) தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவில் முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ரூ.106.55 கோடி மதிப்பில் பணிகள் துவக்கம்!
ஒருபக்கம் ரூ.200 கோடியில் 3,456 சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரூ.106.55 கோடி மதிப்பீட்டில் 1,847 எண்ணிக்கையிலான, சுமார் 255.30 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உள்ளார். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
