2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது ஆட்சியின் முதல் கையெழுத்து எந்தத் திட்டங்களுக்கு இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து என்பது வெறும் நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படாமல், ஒரு அரசின் அரசியல் நோக்கத்தையும், ஆட்சியின் முன்னுரிமைகளையும் மக்களுக்கு அறிவிக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

அந்த வகையில், விஜயின் முதல் கையெழுத்து மக்கள் நலன் சார்ந்த முக்கிய வாக்குறுதிகளுக்கு அமையலாம் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர ரூ.2,500 உதவித்தொகை திட்டமும், மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டமும் முதற்கட்ட முன்னுரிமை பெறக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடருமா, மாற்றமடையுமா, அல்லது விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்தும் மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில், பதவியேற்ற உடனேயே மக்கள் மனதை கவரும் திட்டங்களில் கையெழுத்திடுவது முக்கிய மரபாக இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுக்கடைகள் குறைப்பு மற்றும் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார். 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் இலவசப் பேருந்து பயணம், கொரோனா நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களை முதற்கட்டமாக அமல்படுத்தினார்.

அதே மரபில், விஜயும் தனது அரசியல் வாக்குறுதிகளுக்கு உயிரூட்டும் வகையில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்தும் திட்டங்களிலேயே தனது முதல் கையெழுத்தை போடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.