கடந்த சில ஆண்டுகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பம் அதிகரித்து இருந்து நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கோடை காலத்தில் மழை பெய்வது வழக்கமானது என்றாலும், இந்த ஆண்டு மழையின் அளவு வழக்கத்துக்கு மாறாக அதிகம் பதிவாகியுள்ளது.  கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யததால் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் இயல்பை விட குறைவாக பதிவாகியது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  இது தென்மேற்கு பருவமழை நெருங்கி விட்டதை சுட்டிக்காட்டுகின்றன.

பொதுவாக ஜூன் 1 தென்மேற்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கேரளாவில் வழக்கமாக ஜூன் 1 தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு மே 27ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மழையை தரும். தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட  முன்கூட்டியே துவங்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் இருந்து 4 நாட்கள் முன்பும் அல்லது 4 நாட்கள் பின்பும் தொடங்கலாம். தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாக தொடங்கும் என தெரிய வந்துள்ளது. அதன்படி வரும் 25 ம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக மழை  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு எல் நினோ’போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால் ஜூன் 1ம் தேதிக்கு முன்பே தமிழகத்தில் மிக கன மழை வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மழை குறையும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.