கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் 167.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  தற்போது பணிகள் எவ்வளவு முடிவடைந்துள்ளது என கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாவரவியல் பூங்கா மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் – 78%, மாநாட்டு மையம் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் – 83%, உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் – 100%, செம்மொழி பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி – 100% நிறைவடைந்துள்ளது.

பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம் கமிழ் தோட்டம், பாலைவன தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பசுமை வனம் போன்ற 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

பூங்கா வளாகத்தில் மக்கள் எளிதாக நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக இயற்கை முறையில் நடைபாதை தரை அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்படவுள்ளது.

வளாகத்தினுள் 42 மீட்டர் உயரம் உள்ள பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு பூங்கா அழகினை ரசித்திட ஏற்றவாறு ஜிப்லைனர் அமைக்கப்படவுள்ளது.

குழந்தைகள் விளையாடுவதற்கு என 14000 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமாக விளையாட்டுத்திடல் அமைக்கப்படவுள்ளது. சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.