முதலீடு செய்யும் முறையில் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தனித்தனி மனநிலை காணப்படுகிறது. இந்திய அளவில் பார்க்கும்போது வட இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் தென்னிந்திய மக்களின் முதலீட்டு தேர்வுகளில் கணிசமான வேறுபாடு இருப்பது பல ஆய்வுகளிலும் வெளிப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், பாதுகாப்பான சொத்துகளில் முதலீடு செய்வது என்ற பாரம்பரிய மனநிலை இன்னமும் வலுவாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் சேமிப்பு பழக்கம் பற்றி பேசும்போது, முதலில் குறிப்பிடப்படுவது நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் தான். ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகள் வெளியிட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டு மக்கள் தங்களின் மொத்த சேமிப்பில் சுமார் 60 சதவீதம் வரை நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டில் செலுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.
ஒரு வீடு அல்லது ஒரு நிலம் வாங்குவது தமிழர்களுக்கு வெறும் முதலீடு அல்ல. அது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பாகவும், சமூகத்தில் ஒரு நிலையான அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. தங்களுக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நிலையான சொத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே பல குடும்பங்களை நில முதலீட்டிற்கு இட்டுச் செல்கிறது.
நிலத்திற்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் விரும்பும் முதலீடு தங்கம். உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டிலுள்ள வீடுகளில் மட்டும் சுமார் 6,720 டன் அளவுக்கு தங்கம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட அமெரிக்க நாட்டின் அதிகாரப்பூர்வ தங்க இருப்புக்கு சமமான அளவாகும்.
தமிழ்நாட்டு குடும்பங்கள் தங்களின் சேமிப்பில் சுமார் 30 சதவீதத்தை தங்கம் வாங்குவதற்காக ஒதுக்குகின்றன என்பது ஆய்வுகள் காட்டும் மற்றொரு முக்கிய தகவல். வட மாநிலங்களை விட தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கத்தின் மீதான மோகம் பல மடங்கு அதிகமாக உள்ளது.
இந்திய அளவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர் மேற்கு இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் சேர்த்தாலே வெறும் 7 சதவீத மக்கள் மட்டுமே பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் பார்க்கும்போது, சேமிப்பில் சுமார் 3 சதவீதம் மட்டுமே பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச்சந்தை என்பது ஆபத்தானது, அது ஒரு வகை சூதாட்டம் என்ற பழைய கருத்து இன்னமும் பல கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் நிலவி வருகிறது.
ஆனால், சமீப காலங்களில் இந்த நிலைமையில் மெதுவாக மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில், மாதாந்திர எஸ்.பி.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
தமிழர்களின் முதலீட்டு அணுகுமுறை பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. அதனாலேயே தங்கம் மற்றும் நிலத்தை தலைமுறை தலைமுறையாக இறுகப் பிடித்து வருகின்றனர். தற்போதும் இந்த மனநிலைமை பெரும்பாலான மக்களிடம் மாறவில்லை. ஆனாலும், இன்றைய இளைஞர்கள் நிதி அறிவுடன் பங்குச்சந்தை முதலீட்டையும் ஆராயத் தொடங்கி, அதில் மெல்ல அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளனர்.
