மேற்குப்புறவழிச்சாலைத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படவுள்ளன என மாநில நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

கோவை – பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 32.43 கிலோமீட்டர் நீளத்தில், ரூ.250 கோடி மதிப்பில் மேற்குப்புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதலில் இந்தப் பணி ஜூலை மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப மற்றும் நிலப் பணிகள் தாமதமானதால், வரும் நவம்பர் இறுதிக்குள் பணி முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில்: மைல்கல் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தார் போடுதல் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதையடுத்து, சாலை குறியீடுகள், வண்ணக் கோடுகள், மற்றும் போர்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மைல்கல் மற்றும் மாதம்பட்டி சந்திப்புகளில் தலா ஒரு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மாதம்பட்டி மேம்பாலம் தற்போது கட்டப்பட்டாலும், அதைப் பயன்படுத்துவது இரண்டாம் கட்டப் பணி முடிந்த பின்னரே சாத்தியம். தற்போது இரண்டாம் கட்டப் பணி தொடங்காததால், மேற்குப்புறவழிச்சாலையில் வருவோர் சிறுவாணி சாலையின் வழியாக மட்டுமே இணைய முடியும்.

இதற்கிடையில், சர்வீஸ் சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், இரு மேம்பாலப் பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள் மேற்குப்புறவழிச்சாலையை சர்வீஸ் ரோடு வழியாகப் பயன்படுத்த முடியும்.

இரு மேம்பாலங்களைத் தவிர்த்து, அனைத்து முக்கியப் பணிகளும் நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். மைல்கல் பாலம் பணியும் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர்.