ஆழியார் அணையில் இருந்து, ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, முதல்போக பாசனத்திற்காக தண்ணீரினைமாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று திறந்து வைத்தார்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி. இப்பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக இன்று முதல் அக்டோபர் 15 வரை ஆழியாறு அணையிலிருந்து தொடர்ந்து 152 நாட்களுக்கு 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆழியார் அணையின் தற்போதைய நீர்மட்டம் 74.70 அடியாக உள்ளது. 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட போதுமானளவு தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது.
பள்ளிவிளங்கால் வாய்க்கால் மூலம் 656.06 ஏக்கர் பாசன பரப்பும், அரியாபுரம் வாய்க்கால் மூலம் 1245.72 ஏக்கர் பாசன பரப்பும், காரப்பட்டி வாய்க்கால் மூலம் 781.62 ஏக்கர் பாசன பரப்பும், பெரியணை வாய்க்கால் மூலம் 1902.79 ஏக்கர் பாசன பரப்பும், வடக்கலூர் வாய்க்கால் மூலம் 1780.07 ஏக்கர் பாசன பரப்பும் என மொத்தம் 5 வாய்க்கால்கள் மூலம் 6400 ஏக்கர் பாசன பரப்பு விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
