கோவை கொடிசியா மைதானத்தில் இன்று ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் பொதுக்கூட்டம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக்கூடம் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, ஆதரவாக பேசினார்.

மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் கோவை தெற்கு வேட்பாளர் செந்தில் பாலாஜி; கோவை வடக்கு வேட்பாளர் செந்தமிழ் செல்வன்; தொண்டாமுத்தூர் வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன்; சூலூர் வேட்பாளர் தளபதி முருகேசன்;மேட்டுப்பாளையம் வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம்; கிணத்துகடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயன்; வால்பாறை வேட்பாளர் சுதாகர்;பொள்ளாச்சி வேட்பாளர் நித்தியானந்தம் (கூட்டணி) ஆகியோரை அவர் ஆதரித்து பேசினார்.

நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கோவையுடன் கலந்துவிட்டேன்

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 2021 ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக முறை வந்த மாவட்டம் கோவை தான். இங்கு ஏதாவது ஒரு விழாவுக்கு வந்து கொண்டே இருப்பேன். கோவையும் எனது ஊர் தான் என்ற வகையில் கோவையுடன் ஒன்றிப்போய் உள்ளேன் என கூறினார்.

உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்கள் திமுகவிற்கு பெரும் வெற்றியை தந்தீர்கள். இதை இந்த தேர்தலிலும் தரவேண்டும் என உரிமையோடு கேட்பதாக கூறினார்.

இந்த தேர்தலில் கோவைக்கு வழங்கிய செம்மொழிப் பூங்கா, ஆர்.எஸ்.புரம் ஹாக்கி மைதானம், பில்லூர் மூன்றாம் திட்ட குடிநீர் பணிகள், உக்கடம் பேருந்து நிலையம், விசைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கு மின் கட்டணம் குறைப்பு, தங்க நகை பூங்கா போன்ற திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், ஜி.டி.நாயுடு பாலத்தை சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு போன்ற பிற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.

தேர்தல் முடிவுகள் வந்த பின்பு முதல் நிகழ்ச்சியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் அறிவுலக நிகழ்ச்சி இருக்கும் எனவும் கூறினார். கோவையில் திராவிட மாடலின் சாதனை சரித்திரம் தொடர திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் வந்தால் வெற்றி எங்களுக்கு தான்

2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையும் தாண்டி கொடுக்காத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி காட்டி உள்ளதால் கோவை மக்கள் முன்பு கம்பீரமாக நின்று வாக்கு கேட்பதாக கூறினார் ஸ்டாலின்.

அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என இதுபோல பட்டியலிட எதுவுமில்லை என கூறிய அவர், இந்த கஷ்டம் அதிமுக தலைமைக்கும், பிரதமர் மோடி-க்கும் அதிகம் உள்ளது என விமர்சனம் செய்தார். ஏனென்றால் அவராலும் தமிழ்நாட்டுக்கு வழங்கிய சிறப்பு திட்டம் என்று எதையும் சொல்ல முடியாது என்றார் ஸ்டாலின்.

தேர்தலை முன்னிட்டு வரும் 4ம் தேதி சென்னை வரவுள்ள பிரதமர் எதனை முறை வந்தாலும் அது திமுகவிற்கு வெற்றியாக அமையும் என்றார். 2024 பாராளுமன்ற தேர்தலின் பொது அவர் சென்னை வந்தார், அதனால் திமுக 40/40 வெற்றி பெற்றது. இப்போது அவர் வந்தால் திமுக எதிர்பார்க்கும் 200 தொகுதி இலக்குகள் உறுதியாக கிடைக்கும் என்று பேசினார்.

அவர்களுக்கு கோவை மறந்துவிடும்

தமிழை, தமிழர்களை, தமிழ்நாட்டை பாஜக வஞ்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட நிராகரிப்பு பற்றி பேசினார்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்த 2 மாநகரங்களில் வரவிருந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்ட நிலையில் ஆக்ரா, பாட்னா, போபால் போன்ற மாநகரங்களில் 2011 மக்கள் தொகை 20 லட்சம் மேல் இல்லாமல் இருந்தபோது மட்டும் எளிதாக மெட்ரோ திட்டம் வழங்கப்பட்டதை அவர் விமர்சனம் செய்தார்.

“கோவை மக்களுக்கு அநீதி இழைத்து விட்டு எந்த முகத்தோடு நீங்கள் கோவைக்கு வருகிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, பேரிடர் நிகழ்வுகளின் போது தமிழ்நாடு மறந்துவிடும். தமிழ்நாட்டை மறந்துபோவதால், வாக்குச்சாவடிக்கைகள் மக்கள் செல்லும் போது பாஜக நினைவே அவர்களுக்கு வராமல் போகிறது என கூறினார்.

“கோவையின் வளர்ச்சிக்காக…”

இந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் சூப்பர்ஸ்டார் என்று கூறிய ஸ்டாலின், அதில் உழவர்களை மகிழ்விக்க இலவச மின்சாரம் பெறக்கூடிய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதை அடிக்கோடிட்டு காட்டினார். இதனால் கோவையினுடைய மோட்டார் பம்ப் துறையும் செழிக்கும் என்றார்.

அதேபோல தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கக்கூடிய மேற்கு மாவட்டத்திற்கு சிறப்பு வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளதை மிகப்பெரிய புரட்சிகரமான திடமாக பார்க்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

கோவை மக்கள் இந்த முறை பத்துக்கு பத்து எனும் வெற்றியை திமுக கூட்டணிக்கு வழங்க வேண்டும் ஏனென்றால் திமுகவுக்கு வழங்கும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான வாக்கு, என அவர் கூறினார்.

“தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தாய் தமிழ்நாட்டை காக்க கோவையில் உள்ள அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரிக்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.