கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான விஜயலட்சுமி பழனிசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
ஆசிரியர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 60 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி தலைமையேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.

துணைத் தலைவர் இந்து முருகேசன்; முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்தனர்.
இந்த விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பால் பாட்மிண்டன், கேரம் போர்டு, செஸ், டேபிள் டென்னிஸ்; ஆண்களுக்கான கூடைப்பந்து, கிரிக்கெட்; வாலிபால், பெண்களுக்கான திரோபால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் சுழற்கோப்பைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

இந்த விளையாட்டு விழாவின் முழுமையான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் குழு சிறப்பாக மேற்கொண்டு, நிகழ்ச்சியை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் நடத்தினர். இந்த போட்டிகள் ஆசிரியர்களிடையே நல்லுறவை வளர்த்ததுடன், உடல்நலத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்ததாக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
