சட்டபேரவை தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள அன்பு நகரில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் வந்து பாராட்டு சான்றிதழை வழங்கியதோடு, தேர்தல் நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்., தமிழகத்தில் நடைபெற இருக்கக்கூடிய சட்டபேரவை தேர்தலுக்காக கோவை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்திற்கு துணை ராணுவப்படை வந்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை, தேர்தல் நிலையான கண்காணிப்பு படை மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள சொகுசு விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்க வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
