கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவியுமான வானதி சீனிவாசன், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சிறப்பு வருகைகள் திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வருகின்ற மே 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய தூதரக உயர் ஆணையர் பிலிப் கிரீன், வானதி சீனிவாசனுக்கு அனுப்பி உள்ள அழைப்பிதழில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை அதிகரிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி உள்ளார்.
இந்த பயணத்தின் போது, வானதி சீனிவாசன் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் இந்திய புலம்பெயர் சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடுவார். மேலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகம் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த சமத்துவ நிபுணர்களுடன் அவர் உரையாட உள்ளார். இந்த பயணத்தின் மூலம், ஆஸ்திரேலியா – இந்திய உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
