உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து செயல் அலுவலர் கிருத்திகா, அறங்காவலர் குழு நிர்வாகிகள் ராஜா ராமச்சந்திரன், ஜோதிபாபு, மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்கு சாமியைத் தரிசிக்க ஏகாதசி அன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து அறங்காவலர் ராஜா ராமச்சந்திரன் கூறுகையில், கோவை மையப்பகுதியான உக்கடம் பகுதியில்  பிரசித்தி பெற்ற ஆலயமான கரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு ஆண்டாள் கோவிலிருந்து சிறப்பு பூஜையோடு வரும் மாலையை பெருமாளுக்குச்  சாற்றி வைகுண்ட ஏகாதசி திருவிழாவைச் சிறப்பாக இந்த ஆண்டு கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறாக

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமாள் கோவில் எனப்படும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் தேவாதிராஜன் என்ற வரதராஜப் பெருமாளை, இவ்விடம் வழிபட வேண்டி சோழ மண்டல அரசனாகிய கரிகால சோழ மன்னரால் கோவை கோட்டை மேட்டில் ஸ்ரீ பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் எழுப்பப்பட்டது. அதன்படி பெருமாளுக்கு வருடம் தோறும் திவ்யதேசங்களில் செய்யப்படுவது போலவே, இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா (பரமபதவாசல் திறப்பு) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வரும் 10ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சன்னதி நடை திறப்பு, திருவாராதனம், திருப்பள்ளியெழுச்சி, வேத விண்ணப்பமும், அதைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பும், காலை 7.00 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதை பிராட்டி ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையினை சாற்றி நம் கரிவரதராஜப் பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு எதிர்சேவை திருவீதியுலா நடைபெறுகிறது. மேலும் தகவலுக்கு : 92444 40000