அமெரிக்காவின் 50 சதவீத வரி நமக்கு பாதிப்பு தான். ஆனால் சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்: கடந்த ஆண்டு தலையில் அடிப்பட்டதால், இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 2 வருடம் மோட்டார் சைக்கிள் பயணம் கூடாது என்றார்கள். 5 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு கைலாய யாத்திரை செல்வதற்கான பாதை திறக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை போக வேண்டும் என்று முடிவெடுத்தேன். மருத்துவ ரீதியாக இது முடியாது என்று சொல்கிறார்கள், இதை அதிசயம் என்று சொல்லவில்லை, உயிரே அதிசயமானது தான். யோகா என்பது அதனுடன் இணைந்து வாழும் தன்மை. ஆகையால் இது யோகாவின் சக்திக்கு ஒரு சாட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி குறித்த கேள்விக்கு, இது நமக்கு பாதிப்பு தான். ஆனால் நம் நாட்டின் மதிப்பு, மரியாதையை நாம் இழந்து விட முடியாது. சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது. நாட்டு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும். நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இது எதிர்காலத்தில் எப்படி செல்லும் என்று நான் கணிக்க விரும்பவில்லை. யார் எதை செய்தாலும் நம் நாட்டை செழிப்பாக நடத்திக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே செழிக்க முடியும் என்றில்லாமல் எப்படிபட்ட சூழலிலும் செழிப்பாக நம் தொழில்களை நடத்திக்கொள்ளும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
