அமெரிக்கா தனது இறக்குமதி வரியை 50% லிருந்து 18% ஆக குறைத்ததற்கு, பிரதமர் மோடிக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதியாளர்கள், இந்த சுங்கவரி உயர்வுக்குப் பிறகு கடும் நெருக்கடியை எதிர்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏற்றுமதியை நிலைநிறுத்தி வேகமாக முன்னேறி வந்த பல ஜவுளி ஆலைகள் 30-70% வரை உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலையுடன் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிலக்க நேரிட்டது.

இதை பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற போட்டி நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதியை தங்களிடம் ஈர்க்க தொடங்கியது, இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

அமெரிக்க ஜவுளி ஏற்றுமதியில் சுமார் 28% பங்கு வகிக்கும் தமிழக ஜவுளி துறையின் சிரமத்தை குறைக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை துரிதபடுத்த வேண்டி தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வந்த தமிழக முதல்வருக்கு நன்றி. அமெரிக்க அதிபரை அணுகி சுங்கவரியை திரும்பப்பெறச் செய்ததில் பிரதமர், வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் ஜவுளி அமைச்சர் ஆகியோரின் அயராத முயற்சிக்கு நன்றி.

சுங்கவரி 18% ஆக குறைக்கப்பட்டதன் மூலம், ஜவுளிதுறைக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 18% சுங்கவரி என்பது இந்தியாவுடன் போட்டியிடும் நாடுகளை விட குறைவான வாரியாகும். அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் உலகின் மிகப்பெரிய ஜவுளி சந்தையாகும். எனவே இந்த நாடுகளுடன் செய்துள்ள வரியில்லா ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறைக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.