ஈஷா காவேரிக் கூக்குரல் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் இணைந்து “பசுமைத் தொண்டாமுத்தூர்” இயக்கத்தின் மூலமாக 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்கின் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
தொண்டாமுத்தூர் பகுதியில் 33 சதவீத பசுமைப் பரப்பை உருவாக்குதல், மரம் சார்ந்த விவசாய முறை மூலமாக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு புத்துயிர் அளித்தல் ஆகிய உயர்வான நோக்கங்களுடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. இதற்காக விவசாயிகளுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் உதவியுடன் ஈஷா அறக்கட்டளை மூலமாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்கின் நிறைவாக, ஈஷா காவேரி கூக்குரல், ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டி எலைட், நொய்யல் ஆறு அறக்கட்டளை மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து தேவராயபுரம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திரன் என்ற விவசாயி தோட்டத்தில் இறுதிக்கட்ட மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தின.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டி எலைட் தலைவர் தாரணிதேவி தலைமையுரை ஆற்றினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் செல்லா கே.ராகவேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நொய்யல் ஆறு அறக்கட்டளை செயலாளர் அஜித் சைதன்யா வாழ்த்துரை வழங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், கணேசன் வேதகிரி, ஜவஹர், லட்சுமி மேனன், ராஜசேகர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
