தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கம் உலகளவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் பொருட்களில் ஒன்றாகும். 2025ஆம் ஆண்டிற்கான உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, உலக தங்க சுரங்க உற்பத்தியில் 60% க்கும் மேற்பட்டவை 10 நாடுகளிலிருந்து வருகிறது.
சீனா
உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் சீனா தான். 380.2 டன் தங்கம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உலக தங்க உற்பத்தியில் சுமார் 10% சீனாவில் இருந்து வருகிறது. சீனா தேசிய தங்கக் குழு, ஷான்டாங் தங்கம் போன்ற அரசு நிறுவனங்கள் தங்க சுரங்கத் துறையில் முன்னிலை வகிக்கின்றன.
ஷான்டாங், ஹெனான், ஜியாங்சி ஆகிய மாகாணங்கள் முக்கிய தங்க உற்பத்தி பகுதிகள் ஆகும். தங்க நகைகள் மற்றும் மத்திய வங்கியின் தங்க கையிருப்பும் இங்கு பெரும் பங்கு வகிக்கின்றன.
ரஷ்யா
330.0 டன் தங்கம் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. சைபீரியா மற்றும் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் பெரிய தங்கச் சுரங்கங்கள் உள்ளன. ரஷ்யாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முக்கிய தங்கம் பங்கு வகிக்கிறது. மத்திய வங்கி தங்கத்தை முக்கிய மூலதனமாக வைத்துள்ளதோடு, உள்நாட்டு தங்க கொள்முதலையும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இங்கு 284.0 டன் தங்கம் உற்பத்தியாகிறது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் உள்ள கால்கூர்லி, போட்டிங்டன் போன்ற திறந்த சுரங்கங்கள் உலகப் புகழ்பெற்றவை. தங்கத்தை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் மையமாகவும் ஆஸ்திரேலியா உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தில் சுமார் 80% சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கனடா
நான்காவது இடத்தில் கனடா உள்ளது. இங்கு 202.1 டன் தங்கம் உற்பத்தியாகிறது. க்யூபெக் மாநிலத்தின் அபிடிபி மற்றும் யூகான் பகுதிகள் தங்கத்திற்குப் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்க உற்பத்தி துறை முக்கிய பங்களிப்பு செய்கிறது.
அமெரிக்கா
158.0 டன் தங்கம் உற்பத்தி செய்து, ஐந்தாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. இதில் நெவாடா மாநிலம் மட்டும் மொத்த உற்பத்தியில் 75% க்கும் மேலான பங்கை வழங்குகிறது. தங்க சுரங்க பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நவீனத்துவத்தில் உலகின் முன்னணியில் அமெரிக்கா உள்ளது.
கானா
ஆப்பிரிக்காவில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு கானா. மொத்த ஏற்றுமதி வருவாயில் தங்கம் 40% க்கும் மேலான பங்கைக் கொண்டுள்ளது. அரசு சீர்திருத்தங்கள் மற்றும் சிறு சுரங்கத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் இங்கு உற்பத்தியை உயர்த்தியுள்ளன. 140.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மெக்சிகோ
நூற்றாண்டுகளாக சுரங்கத் தொழிலில் பெயர் பெற்ற மெக்சிகோ, இன்று வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வலுவாக தங்கம் உற்பத்தி செய்கிறது. சோனோரா மற்றும் சகடெகாஸ் ஆகிய பகுதிகள் முக்கிய தங்க மையங்களாகும். 140.3 டன் தங்கம் உற்பத்தியாகிறது.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் உள்ள ‘கிராஸ்பெர்க்’ சுரங்கம் உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்று.
அரசின் சுரங்கத் துறை மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு செயலாக்க திட்டங்கள் உற்பத்தி திறனை உயர்த்தியுள்ளது. 140.1 டன் தங்கம் உற்பத்தியாகிறது.
பெரு
தென் அமெரிக்காவின் முக்கிய தங்க உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றாக பெரு விளங்குகிறது. தங்கம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் 15% பங்கைக் கொண்டுள்ளது. 136.9 டன் தங்கம் உற்பத்தியாகிறது. கஜமார்கா மற்றும் லா லிபர்டாட் பகுதிகள் முக்கிய தங்க மையங்கள். ஆனால் சட்டவிரோத சுரங்கப்பணி மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் இன்னும் நீடிக்கின்றன.
உஸ்பெகிஸ்தான்
மத்திய ஆசியாவில் தங்க உற்பத்தியில் உஸ்பெகிஸ்தான் நாடு முன்னிலை வகிக்கிறது. 129.1 டன் உற்பத்தியாகிறது. இங்குள்ள ‘முருன்தாவ்’ சுரங்கம் உலகின் மிகப்பெரிய திறந்த சுரங்கங்களில் ஒன்று. அரசின் புதிய சுரங்க சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து உற்பத்தியை மேம்படுத்தியுள்ளன.
