தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், பயிர் மேலாண்மை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் வியாழன் அன்று இந்தியாவில் காலநிலை மீள் திறனுக்கான நகர்ப்புற சூழலமைப்பு சார்ந்த தகவலமைப்பு முறைகள் குறித்த சர்வதேசப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இதில் காலநிலை மீள்திறன் கொண்ட நகர்ப்புற சூழலமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்கள் ஆகியோர் பங்கேற்று அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த துவக்க நிகழ்வில், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி முதன்மையரும், பயிர் மேலாண்மை இயக்ககத்தின் பொறுப்பு இயக்குநருமான பி. ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.
நகர்ப்புறங்களின் காலநிலை மாற்றத் தாங்குதிறன் மிக்க திட்டமிடலில் அறிவியல் அணுகுமுறைகளையும் நிலைத்த தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ். கார்த்திகேயன் அவர்கள், வளர்ந்து வரும் நகர்ப்புற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் சூழலியல் அடிப்படையிலான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
முன்னதாக, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும் தலைவருமான ப. முரளி அர்த்தனாரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அ.பரணி, பேராசிரியர் மற்றும் தலைவர் சுற்றுச்சூழல் அறிவியல் துறை அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.
திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியருமான எ. பரமேஸ்வரி அவர்கள் திட்டத்தின் கண்ணோட்டத்தையும், அதன் நோக்கங்களையும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய நகர்ப்புற வளர்ச்சியில் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் அறிவியல் இணைப் பேராசிரியர் முனைவர் பி. கலைச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
காலநிலை மீள்திறன் கொண்ட இயற்கை வள மேலாண்மைக்கான புவிசார் தொழில்நுட்பங்கள், இயற்கையைச் சார்ந்த தீர்வுகள், நகர்ப்புற பல்லுயிர் மற்றும் பசுமை உள்கட்டமைப்பு, நகர்ப்புற நிர்வாகம், சமூகப் பங்கேற்பு மற்றும் நிலையான நகர்ப்புற காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய கருப்பொருள்களின் மீது தொழில் நுட்ப அமர்வுகள் கவனம் செலுத்தின.
நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சூழலமைப்புச் சேவைகள், நகர்ப்புறகாடுகள் வளர்ப்பு, பசுமை உள்கட்டமைப்பு, நகர்ப்புற நிர்வாகம், குறைந்த கார்பன் மற்றும் காலநிலை மீள் திறன் கொண்ட நகர்ப்புறத் திட்டமிடல், மற்றும் நிலையான நகர்ப்புற மேம்பாடு, பொது சுகாதாரம் மற்றும் வெப்ப அளவை குறைத்தல் ஆகியவற்றில் தொழில்துறையின் பங்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகள், பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி அதிகாரிகள், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்று விவாதித்தனர்.
