கோவை செம்மொழிப் பூங்காவிற்கு வருகை புரியும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நுழைவுச் சீட்டினை ‘செம்மொழிப் பூங்கா செயலி’ மற்றும் ‘நம்ம கோவை’ ஆகிய செயலிகள் மூலமாக பெற்றுக் கொண்டு வருகை புரியலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவினை கடந்த நவம்பர் 25 அன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த டிசம்பா் 11ம் தேதி முதல்  நாள்தோறும் காலை முதல் மாலை வரை அதிக அளவிலான பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஒரே நாளில் சுமார் 27000 எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். இதன் காரணமாக நுழைவுச்சீட்டு வழங்குவதில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்படுவதுடன் அதிக அளவிலான கூட்ட நெரிசலும் ஏற்படுகின்றன.

அந்த வகையில், செம்மொழிப் பூங்காவிற்கு  வருகை புரிவதற்கு முன்பாக தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நுழைவுச் சீட்டினை ‘செம்மொழிப் பூங்கா’ செயலி மற்றும் ‘நம்ம கோவை’ ஆகிய செயலிகள் மூலமாக எளிதாக பெற்றுக் கொண்டு வருகை புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.