2026 சட்டமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு ஞாயிறு வெளிவந்தது.
“தமிழகத்தில் இனி வருவது எடப்பாடியாரின் காலமாக இருக்கும்” என அ.தி.மு.க. மாணவர் அணியின் மாநில செயலாளர் ‘சிங்கை’ ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தேர்தல் பணிகளை நாங்கள் ஓராண்டுக்கு முன்பே துவங்கி விட்டோம். வரப்போகும் தேர்தலுக்கு நாங்கள் மிக தயாராக உள்ளோம்.”
“இனி வரப்போவது எடப்பாடியாரின் காலமாக இருக்கும். அதற்கான கடும் உழைப்பை கட்சி செய்துள்ளது, நாங்களும் முன்னதாகவே தேர்தலுக்கும் தயாராகி வருகின்றோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இது பற்றி திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பதில் ஆச்சரியம் ஏற்படுத்துவதாகவும் உள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக உடற்கூறாய்வு அறிக்கை வரட்டும் என்று அவர் கூறுவதை பார்க்கும் போது, கரூர் சம்பவத்தில் ஒரே நாள் இரவில் 41 பேருக்கும் உடற்கூறாய்வு அறிக்கையை இரவோடு இரவாக தயார் செய்ய முடியும் என்றால் இந்த சம்பவத்தில் ஏன் முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். எந்த சம்பவங்களுக்கெல்லாம் உடனே செயல்படவேண்டும் என திமுக தேர்வு செய்து செயல்படுவது போல தெரிகிறது.
மேலும் அவர் பேசுகையில், தொடர்ச்சியாக பள்ளி மாணவிகளும் கல்லூரி மாணவிகளும் தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை பார்க்க முடிகிறது என கூறிய அவர், தூத்துக்குடி சம்பவத்தில் மாணவியின் பெற்றோரை காவல்துறை நடத்திய விதம் பற்றி விமர்சித்தார்.
மேலும் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்திருந்தால் இப்படி காவல் துறையினர் செய்திருப்பார்களா? ஏழை குடும்பத்தில் இருந்து வந்ததால் இப்படி நடத்தினார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும், அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
