கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் நீண்ட வருடங்களாக உள்ள குப்பைக்கிடங்கு பிரச்சனை என்பது தீர்க்கவே முடியாத பிரச்சனை அல்ல. மாநிலத்தில் நமது குரலை கேட்கும் ஆட்சி வரும் போது இது போன்ற பிரச்சனைகள் தீரும் என தே.ஜ.கூட்டணியின் கிணத்துக்கடவு வேட்பாளர் தாமோதரனை ஆதரித்து பேசுகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். கிணத்துக்கடவு வேட்பாளர் தாமோதரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்ட போது, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட பிரச்சனைகள் பற்றி அவர் பேசினார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை

இந்தியாவில் வெள்ளலூர் மக்களுக்கு நடப்பது போன்ற அவலம் வேறு எங்கும் தனக்குத் தெரிந்த அளவில் நடக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை கூறினார்.

இங்கு தினமும் 1000 டன் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் கொட்டப்படுகிறது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் நடைபெற்ற வருகிறது. அதில் இதுவரை தீர்ப்பாயத்தின் அறிவுரை பலவற்றை பின்பற்றாததால் பெரும் தொகையை அரசு அபராதமாக செலுத்தி வருகிறது. அவ்வாறு இருந்தபோதும், இதற்கான நிரந்தர தீர்வை வழங்க இப்போது வரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.

மாநில அரசு இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் உள்ளது என்ற குற்றம் சாட்டிய அவர் ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கில் தினமும் 1000 டன் குப்பை சேரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து பல நூறு டன் குப்பைகளை கொண்டு வந்து இங்கு சேர்க்க நடவடிக்கைகள் துவங்கி உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். (வெள்ளலூரில் தினமும் 1200 டன் திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் ஆலையை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது).

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இதை இப்படியே விட்டு வைத்துள்ளது தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். தற்போது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆய்வு நடைபெற்றுள்ளதை பற்றி பேசிய அண்ணாமலை, மத்தியில் மோடி அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் கிணத்துக்கடவில் தாமோதரன் வெற்றிபெறும் போது, இந்த குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

ஏன் கைவீட்டீர்கள்?

அதிமுக ஆட்சியில் வெள்ளலூர் பகுதியில் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தை எதற்காக திமுக தலைமையிலான  தமிழக அரசு நிறுத்தியது என்று அவர் கேள்வி எழுப்பினார். ரூ.50 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டுவரப்பட்ட கட்டிடம் அப்படியே போட்டு வைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சிக்கு எதிரான ஒரு கட்சி என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது என்று விளாசினார்.

போதை பொருள் பயன்படுத்தும் இடமா?

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் ஊராட்சியில், மாமாங்கம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய ஆற்றுப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதை பற்றி பேசிய அவர், இந்த இடம் போதை பொருள் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளது என திமுக-வுக்கு ஆதரவாக எழுதும் நாளிதழில் கூட வந்துள்ளது எனக் கூறினார்.

ஆனைமலை நல்லாறு திட்டம்

கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் பலர் உள்ளனர். இந்த இடத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அதை திமுக அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது என்று கடுமையாக சாடினார்.

அப்போது அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கேரளா சென்று, முதலமைச்சர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த திட்டத்தை 2 மாநிலம் விட்டுக்கொடுத்த நிறைவேற்ற முயற்சிகள் எடுத்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடர்பாக 5 ஆண்டுகளில் கேரள அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

2023 ஆம் ஆண்டில் கேரளாவில் சிறுவாணி ஆறு ஓடக்கூடிய இடத்தில் பாலம் கட்ட அம்மாநிலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதை தடுப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக ஆகியோர் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவினுடைய முதலமைச்சருக்கு ஒரு கடிதத்தை எழுதி, கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று பெயரளவில் கடிதம் எழுதினார் என கடுமையாக விமர்சித்தார். கோவை மக்களின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை தான் திமுக அரசு எடுத்துள்ளது என விளாசினார்.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனை, ஆனைமலை நல்லாறு திட்டம் என கிணத்துக்கடவு தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இங்கு ஆட்சியில் அமைத்ததும் சரி செய்யப்படும் என்று அண்ணாமலை பேசினார்.