கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்: தமிழ், தமிழர் என பேசிக்கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம், டெல்லியிலே துணை ஜனாதிபதி போட்டிக்கு ஒரு தமிழர் போட்டியிடும் போது, தமிழர்களின் முதுகில் குத்துவது போல ஒரு துரோகத்தை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
தமிழர்களுக்கான துரோகத்தை திமுக செய்துகொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது, கட்சி சார்பு இன்றி அத்தனை மகாராஷ்டிராகாரர்களும் பிரதீபா பாட்டீலை ஆதரித்தார்கள். ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசு தலைவராக ஆகும்பொழுது, ஒடிசாவை சேர்ந்த அனைவரும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தார்கள்.

ஆனால் தமிழர்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என பேசும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், தமிழர் வேட்பாளராக நிற்கும்பொழுது, அவருக்கு மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்த கூட்டணி கட்சிகள் திமுகவோடு சேர்ந்து, தமிழருக்கு எதிரான துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். வரலாறு இதை மன்னிக்காது.
திமுகவை 2026ல் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒற்றை இலக்கு. இதை உணர்ந்து அத்தனை பேரும், ஓரணியில் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் தலைமையின் எண்ணம்.

மிக விரைவில் இந்த தேர்தலில் கூட்டணி என்பதை தாண்டி கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகப்போகிறது. கூட்டணிக்குள் இருக்கும் அனைத்து சிக்கல்களும் விரைவில் சரி செய்யப்பட்டு திமுகவுக்கு எதிராக வியூகம் வகுக்கப்படும். அதற்கான செயல் திட்டத்தில் இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறினார்.
