கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மதியம் 12 மணியளவில் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு
ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து, திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வருகிறார்.
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலப்பரப்பில், பொதுப்பணித்துறையின் மூலம் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட வளாகம், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நூலக வளாகம் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நூலகம், 350 பேர் அமரக்கூடிய அரங்கம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளி தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள உதவும் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒவ்வொரு தளத்திலும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நூல்கள், அறிவியல் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை எளிதாகப் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கோவை விமான நிலையத்திலிருந்து காந்திபுரம் பெரியார் அறிவுலகம் வரை முதலமைச்சர் ரோட் ஷோவில் மக்களை சந்திக்கிறார். இதனால் சாலையில் இருபுறமும் போலீசார் பேரிக்காடுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் கோவை காவலர் பயிற்சி மைதானத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் சென்று, அங்கு நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கோவை திரும்பும் முதலமைச்சர், கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
இதனிடையே முதலமைச்சர் கோவை வருவதை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் சாலையில் அவரை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
