திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் இடமின்றி மொட்டை மாடி, வராண்டாவில் மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னலாடை நகரான திருப்பூரில் வெளி மாவட்டம், வெளி, மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மாநகராட்சி பள்ளிகளை நம்பியே இந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் பல பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1452 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் எடுக்க போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில் மாணவர்களை பள்ளி வராண்டாவில், மொட்டை மாடியில் அமர வைத்தும் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
மொட்டை மாடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். விபத்து நேரிடுவதற்குள் உடனடியாக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து போதிய வகுப்பறைகள் அமைத்திட வேண்டும் என்பது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
