தமிழ் பண்பாட்டின் செழுமையையும் தொன்மையையும் கொண்டாடும் வகையில், கோவை ஈஷா யோக மையத்தில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” பிப்ரவரி 27 முதல் மார்ச் 9 வரை 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இத்திருவிழா, தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, கலைகள், உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டுப் பொருட்களின் அரங்குகள் இடம்பெறும். மேலும், தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, சித்த மருத்துவம், கட்டிடக்கலை நுட்பம் போன்றவற்றைப் பறைசாற்றும் 24 கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சி

தமிழகத்தில் முதன்முறையாக, நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சி மார்ச் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இதனுடன், கொங்குநாட்டு வீர விளையாட்டான “ரேக்ளா பந்தயம்” மார்ச் 9-ஆம் தேதி நடத்தப்படும்.

தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள்

பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடைபெறும். மேலும், தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம் போன்ற 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள்

தமிழர் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை நடத்தப்படும். இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், பாரம்பரிய கலைகளின் செய்முறை பயிற்சி வகுப்புகள் மார்ச் 1 முதல் 9 வரை நடைபெறும்.

இத்திருவிழா, தமிழர் பண்பாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்று மகிழுமாறு அழைக்கப்படுகிறார்கள்.