தமிழ்நாடு தொழில் துறை சார்பில் கோவையில் ‘டி.என்.ரைசிங்’ முதலீட்டாளர்கள்
மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.43,844 கோடி மதிப்பிலான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீடுகள் மூலம் கோவை பிராந்தியத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணையாக இருப்பார்கள். தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவைக்கு முதல்வரான பின் 15 முறைக்கு மேல் வந்துள்ளேன்
தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.
மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். கோவையைப் போன்று தமிழ்நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும். தொழில்துறையினர் யாரை சந்தித்தாலும் தமிழ்நாட்டுக்கு முதலீடு செய்ய வாருங்கள் என கோரிக்கை விடுத்து வருகிறேன்.
வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தேன். திராவிட மாடல் ஆட்சியில் 1,016 தொழில் முதலீடு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போது 62,413 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தற்போது 79,185 ஆக உயர்ந்துள்ளது. 42 ஆண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசின் பி.எப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 80% நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுக ஆட்சியையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பிரிக்க முடியாது எனப் பேசினார்.
இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, சக்தி குழும நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம், LMW நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, சி.ஆர்.ஐ பம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவுந்தர ராஜன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த், டேனி ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவராமன் கந்தசாமி, பல்வேறு தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
