தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,943 கோடி கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு இடைக்கால நிதியறிக்கையை வரவேற்பதுடன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒட்டுமொத்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த நிதியறிக்கை தமிழக ஜவுளித்துறைக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கைகளை அமல்படுத்தி தமிழகத்தில் ஜவுளி ஆலைகளை நவீனப்படுத்தவும், கட்டுமானங்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், புதிய மூலதனங்களை ஈர்க்கும்.

கோவையில் அமைந்துள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் அதிநவீன விளையாட்டு ஜவுளி பொருட்கள் மற்றும் இதர தொழில்நுட்ப ஜவுளிப்பொருட்களை ஆராய்ச்சி செய்திட சோதனை கூடங்களை அமைத்திடும் வகையில் ரூ.6 கோடி நிதியை ஒதுக்கி உள்ளதை வரவேற்கிறோம்.

கைத்தறி ஜவுளி பூங்கா, விசைத்தறிகளை நவீனப்படுத்துதல், புதிய நாடா இல்லா தறிகளை நிறுவிடுதல், புதிய சாய ஆலைகள், தொழில்நுட்ப ஜவுளிப்பொருள் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடைகளின் புதிய மூலதனங்களை ஈர்த்திடும் வகையில் இடைக்கால நிதி அறிக்கை அமைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.