ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், கோவையில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த செய்தியாளர் சந்திப்பு என்பது தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக தான்.

1979இல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் தொழிலின் தார்ப்பரியமே தர்மம் தான். தர்மத்துடனும், சத்தியத்துடனும் தான் தற்பொழுது வரை தொழில் செய்து வருகிறோம். அதுதான் இத்தனை நாட்களாக எங்களை காப்பாற்றி வருகிறது.

கோவையில் இருந்து உலக அளவில் எங்கள் நிறுவனம் சென்றதற்கு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், அதற்கேற்றார் போல எங்களுடைய தொழில் தர்மமும் தான் காரணம்.

1979 ஆம் ஆண்டு நிறுவனம் துவங்கும் பொழுது சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட இனிப்புகள் என்று எப்போது விளம்பரம் செய்தோமோ, அன்றிலிருந்து இன்று வரை அதிலிருந்து ஒரு இன்ச் கூட விலகியது கிடையாது. அதிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது.

பொதுமக்களுக்கு நாங்கள் தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் நாங்கள் எப்பொழுதும் ஒரே நிலைத்தன்மையுடன் தான் இருந்து வருகிறோம். இனிப்புகள் அனைத்தும் நெய்யினால் மட்டுமே தான் தயாரிக்கிறோம். எந்த ஒரு கலப்படமும் கிடையாது. கலப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இல்லை.

40 வருடங்களாக ஒரே இடத்தில் இருந்துதான் நெய்யையும் வாங்கி வருகிறோம். ஒரு முறைக்கு உட்பட்டே அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. தற்பொழுது அனைத்தும் சிஸ்டம் கண்ட்ரோலுக்கு சென்று விட்டது. மேலும் சோதனை செய்தாலும் எந்த ஒரு கம்ப்ளைன்ட் வந்ததில்லை.

நாங்கள் எப்பொழுதும் உண்மையாகத்தான் இருப்போம். சத்தியத்துடன் தான் இருப்போம். வாடிக்கையாளர்களுடன் தான் இருப்போம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்போம் என தெரிவித்தார்.