வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் புதிய சேர்க்கைகளுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடங்கியுள்ளது. இதனை எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைனில் வாக்காளர் திருத்தப் படிவங்களை பூர்த்தி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கி, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி டிசம்பர் 4 வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒரு மாதத்துக்குள் இத்தனை வாக்காளர்களை நேரில் சந்தித்து சரிபார்ப்பது சாத்தியமா என்ற கேள்வி பலரிடமிருந்து எழுந்துள்ளது. அவசர கதியில் பணியை மேற்கொண்டால் குளறுபடிகள் ஏற்படும் என கருத்து நிலவுகின்றன.
இந்நிலையில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர்கள் இணையத்தின் மூலமாகவும், கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம் என அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம், தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in மூலம் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்ய, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தி இருக்கவேண்டும்.
ஆன்லைனில் படிவம் பூர்த்தி செய்யும் முறை
- முதலில் https://voters.eci.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் உள்நுழையவும்.
- உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி) வரும். அதை உள்ளிட்டால் இணையத்தளத்துக்குள் நுழையலாம்.
- பின்னர் இணைய பக்கத்தில் காட்டப்படும் ‘கணக்கீட்டு படிவம்’ (Fill Enumeration Form) என்ற இணைப்பை தேர்வு செய்யவும்.
- வாக்காளர் இணையப்பக்கத்தில் கேட்கும் தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணையம் ‘e-sign’ பக்கத்திற்கு மாறும்.
- பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஓ.டி.பி எண் வரும். அதை பதிவு செய்த உடன், படிவம் பதிவேற்றப்படும்.
