கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்துகின்றன.

தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

தென் மண்டலத்தில் ஆதியோகி ரதங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில், திருவேடகம் ஏடகநாதர் கோயில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில், காளையார் கோவில், சொர்ணகாளீஸ்வரர் கோயில், திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதர் கோயில், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளது.

இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற வழியாக சிவத்தலங்கள் வழியாக, சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.