கோவை மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று வெளியிட்டனர்.

இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் மூன்று முக்கிய இடங்களில் ஸ்கை வாக் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி சாலை சந்திப்பு

அவிநாசி சாலை மற்றும் லட்சுமி மில் சந்திப்பில் பொதுமக்கள் அதிகமாக சாலையை கடந்து செல்வதால், போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேல்மட்ட நடைபாதை மேம்பாலம் அமைக்க ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கிராஸ்கட் சாலை

கோவை மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் ஒன்றான காந்திபுரம் நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட் சாலை சந்திப்பில் சாதாரண நாட்களை விட முக்கியமான பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மேல்மட்ட நடைபாதை (ஸ்கை வாக்) ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

உக்கடம் பேருந்து நிலையம் பகுதி

உக்கடம் பகுதி பிரதான சாலையில் இருபுறமும் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்தினை கருத்தில் கொண்டு மேல்மட்ட நடைபாதை (ஸ்கை வாக்) ரூ.6.31 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.