பாலியஸ்டர் பஞ்சு, இழை நூல்கள் மற்றும் நூற்பு நூல் போன்ற செயற்கை இழை மூலபொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை விலக்கியதற்கு பிரதமர் மோடிக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா)  நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக (சைமா) தலைவர் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் சுருக்கம்: பாலியஸ்டர் பஞ்சு, உற்பத்திக்கு அத்தியாவசிய மூலப்பொருள்களான டெரிஃப்தாலிக் ஆசிட் மற்றும் எத்திலின் குளைகால் மீது இருந்த கட்டாய தரச் சான்றிதழ் உத்தரவு நீக்கம், மூலப்பொருள் கிடைக்கும் திறனை உயர்த்துவதோடு, போட்டித்திறனையும் மேம்படுத்தும்.  பல லட்சக்கணக்கான விசைத்தறிகளின் நிதி நிலையை பாதுகாத்து ஸ்த்திரனுடன் செயல்பட உதவும்.

விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பாலியஸ்டர், அதனுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் இறக்குமதி சீர்படுத்தப்பட்டு, நூற்பாலைகள், நெசவாளர்கள் மற்றும் பதப்படுத்துதல் துறைகளுக்கு இடையறாத மூலப்பொருள் விநியோகம் உறுதி செய்யப்படும்.

இந்த முடிவு, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை திறம்பட மீண்டும் தொடங்குவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விலைப்போட்டித் திறனை மீட்டெடுத்து வேலைவாய்ப்பை நிலைநிறுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.

மேலும், விஸ்கோஸ் பஞ்சு இழை மற்றும் நூல் மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமர், ஜவுளித்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை இழை ஜவுளித்தொழில் வளர்ச்சி அடையும் வகையில் கொண்டுவந்துள்ள கொள்கை சீர்திருத்தங்களுக்கு வர்த்தகத்துறை, ஜவுளித்துறை மற்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகங்களுக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.