கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (29.07.2025) புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள நாய் கருத்தடை மையம் முன்பு பெரும் அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

86, 84, 82-வது வார்டுகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணமாக புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையம் செயலிழந்து வருவதாகவும், இதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தெரிவித்தபடி, தெருநாய்கள் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தெருநாய்கள் மனிதர்களை தாக்கிய சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலைமைக்கு மாநகராட்சி உடனடியாக தீர்வு காண வேண்டும். புல்லுக்காடு நாய் கருத்தடை மையத்தை மாற்றும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தெருவில் சுற்றும் நாய்களை மக்கள் நேரடியாக மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கும் என எஸ்டிபிஐ கட்சி எச்சரித்துள்ளது.