சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள், பாடுவதைப் போல் அழகாக தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள் என பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் பாராட்டு தெரிவித்தார்.

பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிகாட்டுதலில், சமஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் “தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு”  நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் அவர்களின் முன்னிலையில் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய மருதாசல அடிகளார், “சத்குரு அவர்களுக்குப் பாரம்பரியமாக இருக்கக்கூடிய கலைகளை, வித்தைகளைப் பேண வேண்டும் என்பது நல்லதொரு எண்ணம். அந்த அடிப்படையில் இங்கே இந்த குழந்தைகள் தேவாரத்தை அருமையான முறையில், நம்முடைய ஓதுவார் மூர்த்திகள் எப்படிப் பாடுகின்றாரோ அது போன்று அழகாகப் பாடக்கூடிய வல்லமை பெற்றவர்கள். இந்த ஒரு கலை மட்டுமல்லாமல், நம்முடைய பழமை மிகுந்த கலைகள் அனைத்தையும் குழந்தைகளுக்குச் சத்குரு கற்றுத்தருகின்றார்,” என்றார்.

இதில் பங்கேற்ற சத்குரு குருகுல மாணவர்கள் பல்வேறு தேவாரப் பாடல்களைப் பாடினர். இதனிடையே திருஞானசம்பந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கதையாடல் மூலம் மாணவர்கள் விவரித்தனர். இதில் பேரூர் ஆதீன மடத்தின் மாணவர்கள், பக்தர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.