சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா  பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து யோகா பயிற்சி செய்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக நிர்வாகி வசந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி வேலுமணி பள்ளி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்தார்.

செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கூறுகையில்: உலகம் முழுவதும் 190 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி துவங்கி, யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.  யோகா செய்தால் மனம் அமைதியாக இருக்கும். நோய் தொற்றில் இருந்து விடுபடலாம்.

போதை கலாச்சாரத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி செய்யவேண்டும். அனைத்து வயதினரும் இதை செய்யலாம்.  அதிமுக ஆட்சியில் 2021 வரை போதை பொருட்கள் புழக்கம் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்று காவல்துறை கடும் நடவடிக்கையில் எடுத்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் அதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும்போது போதை கலாச்சாரம் முழுமையாக தடுக்கப்படும் என தெரிவித்தார்.