நொய்யல் ஆற்றின் கரையை பலப்படுத்தி, கழிவுநீர் செல்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ரூ.202.54 கோடி ஒதுக்கியுள்ளது.
கோவை குற்றாலத்தில் துவங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக நொய்யல் என்னும் கிராமத்தில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது. கோவை மாவட்ட பகுதிகளில் 67.71 கி.மீ நீளத்திற்கும், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்18.56 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது.
நொய்யல் ஆற்றின் கரை அருகில் உள்ள குடியிருப்பு, தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.56 கி.மீ நீளத்திற்கு நொய்யல் ஆற்றில் மாசு குறைப்பு பணிகள் மற்றும் ஆத்துப்பாலம் முதல் நஞ்சுண்டாபுரம் வரை 4.30 கி.மீ நீளத்திற்கு ஆற்றின் இரு கரைகளிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.178.48 கோடி ஒதுக்கியுள்ளது.

மேம்பாட்டு பணிகளின் கீழ் கல்லாமேடு, என்.பி.இட்டேரி, பட்டணம் சாலை ஆகிய 3 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம், முத்து காலனி, என்.பி.இட்டேரி, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஆத்துப்பாலம் முதல் நஞ்சுண்டாபுரம் வரை நொய்யல் ஆற்றின் கரை பலப்படுத்தப்படும்.
மேலும் இழுவை அமைப்புகள், ஜியோ-செல் அமைப்பு, மரம் மற்றும் அமர்விடங்கள், தோட்டம், தடுப்பு சுவர், மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை பாதை, படித்துறை, குப்பைத் தடுப்பு மிதவை, பார்வை மேடை, சூரிய ஆற்றல் விளக்குகள், சூரிய ஆற்றல் மர விளக்குகள், பாதுகாப்புத் தூண்கள், ஓய்வு பகுதி, வேலி, சுழலும் கதவுகள், இரும்பு பாலம், சிறு பாலங்கள், பூங்காக்கள், குப்பை சேகரிப்பு தொட்டிகள், தகவல் பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு பின்பு 5 வருட காலத்திற்கு ரூ.24.26 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் விரைவில் துவங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
