பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், வைட் ஈகிள் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் ரோபோட்டிக்ஸ் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ரோபோட்டிக்ஸ் அடிப்படைகள், திட்ட உருவாக்கம் மற்றும் வடிவமைப்புச் சிந்தனை ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிரச்சினைகளைக் கண்டறிதல், புதுமையான யோசனைகளை உருவாக்குதல், தீர்வுகளை வடிவமைத்தல் மற்றும் அவற்றைச் செயல்திட்டங்களாக மாற்றுதல் போன்ற திறன்கள் மாணவர்களிடம் ஊக்குவிக்கப்பட்டன.

ரோபோட்டிக்ஸ் மற்றும் முப்பரிமாண அச்சிடுதல் குறித்த நேரடிச் செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட கருத்துகளைப் பயன்படுத்திப் பல்வேறு திட்ட மாதிரிகளை உருவாக்கினர்.
சிறந்த திட்டத்தை உருவாக்கிய மாணவர் குழுவைப் பாராட்டும் வகையில், கல்லூரி முதல்வர் நந்தகுமார் ரொக்கப் பரிசு வழங்கினார். பிபிஜி குழுமக் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு, துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
