சாலைப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறந்த தன்னார்வக் கல்லூரி விருது வழங்கப்பட்டது. உயிர் சாலைப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லூரியின் சீரிய அர்ப்பணிப்பு, நேர்த்தியான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

உயிர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு காவல் துறையால் நடத்தப்பட்ட நிகழ்விற்கு, கோவை நகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமை வகித்து விருது வழங்கினார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது: இளம் மனங்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதில் கல்லூரியின் பங்களிப்பினைப் பாராட்டினார். சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களிடையே அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் அமர்வுகள், ஓட்டுநர் விழிப்புணர்வு பட்டறைகள், பியர் டு பியர் துறை பிரச்சாரம், சாலைப் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வுகளை விளையாட்டுகள் மூலம் எடுத்துரைப்பது போன்ற விழிப்புணர்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

வணிகவியல் நிறுவன செயலாளர் துறையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி சமூக ஈடுபாடு, தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலுக்கான சிறந்த வழிகாட்டி விருதைப் பெற்றார். மாணவர்கள் குருமூர்த்தி, பிரகதீஸ், பியர் டு பியர் துறை பிரச்சாரம் மற்றும் சமூக அடிப்படையிலான சாலைப் பாதுகாப்பு பிரச்சாரங்களைச் செயல்படுத்துவதில் சிறந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதற்காகச் சிறந்த தன்னார்வலருக்கான பாராட்டு விருதைப் பெற்றனர்.