பெங்களூரு, சென்னை, கோவை போன்ற நகரங்களில் பொதுமக்கள் ரேபிடோ சேவை வசதிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பைக் டாக்ஸி, ஆட்டோ, கேப், பார்சல் சேவைகளை ரேபிடோ வழங்கி வருகிறது.
ரேபிடோ தொடங்கப்பட்ட சமயத்தில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பைக் டாக்ஸியில் ஒரு நபர் எளிதாக பயணம் செய்யலாம். இருக்கும் இடத்தில் இருந்தே பிக், ட்ராப் வசதி உள்ளதால் இரு சக்கர வாகனம் இல்லாதவர்கள், அவசரமாக பயணம் செய்பவர்களுக்கு கைகொடுக்கிறது. அதேசமயம் ஆட்டோ, டாக்ஸியில் சென்றால் பணம் அதிகம் செலவாகும். ஆனால் ரேபிடோ பைக்கில் செல்வதால் பொதுமக்களுக்கு பணம் மிச்சம் என்ற நிலை இருந்தது.
குறிப்பாக, ரேபிடோ இருசக்கர வாகன சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பைக் டாக்சியில் கட்டணம் குறைவு என்பதால், ஒரு நபர் போக்குவரத்துக்கு பெரிதும் உதவுகின்றன. ஒருபக்கம் பாசிட்டிவாக இந்த சேவைகள் இருந்தாலும், ரேபிடோ ஓட்டுநர்கள் மற்றும் அதன் சேவைகளின் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
வரவேற்பு இருந்த நிலை மாறி ரேபிடோ சேவை மீதான மக்களின் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த பைக் டாக்சியில் ஒரு இடத்திற்கு செல்ல, ஆப்.,பில் புக் செய்யும்போது அதில் குறிப்பிட்ட தொகை காண்பிக்கும். ரூ.50 காண்பித்தால், கூடுதலாக 30, 40 ரூபாய் தருவதாக சொன்னால்தான் வருவார்கள். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல ரூ.45 என இருந்தால், அதில் ரேபிடோ நிறுவனம் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள தொகை ஓட்டுனர்களுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. இதனால் பயணிகளிடம் கூடுதல் தொகை கேட்கின்றனர்.
அதேபோல, ரேபிடோ ஆட்டோ சேவையிலும் கூடுதல் கட்டண கொள்ளை நடப்பதாக மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதிக தொகை கேட்டு டிரைவர்கள் பயணிகளிடம் வாக்குவாதமும் செய்கின்றனர்.
ஆப்.,பில் கேட்கும் தொகையை விட 20, 30 ரூபாய் கேட்டால் கூட பலரும் கொடுத்து விடுகின்றனர். ஆனால் ரூ.200 என காட்டினால், கூடுதலாக ரூ.100 வரை அடாவடியாக சிலர் கேட்கின்றனர். கேட்கும் தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டால் தான் பயணத்தை அக்செப்ட் செய்வார்கள்.
அதிலும் ஓட்டுநர்களில் சிலர் பயணிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்கின்றனர். அப்படி கேட்டு கொடுக்காவிட்டால் அந்த டிரிப்பை ரத்து செய்கின்றனர். அல்லது டிரிப்பை மாற்றி விடுகிறார்கள். இதனால் பயணிகளுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன.
பயணிகள் பலரும் இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த பலனும் இருப்பதில்லை. ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்கின்றாரா? என ஆப்.,பில் புகார் அளிக்கும் வசதி இருந்தும், அதனைப் பயன்படுத்தி, புகார் அளித்தால் பதில் இருப்பதில்லை என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். கூடுதல் தொகை வாங்கும் டிரைவர்களுக்கு ரேபிடோ நிறுவனமே உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.
ஓட்டுநர்கள் இப்போது வழக்கமான கட்டணத்தில் பயணங்களை ஏற்க மறுப்பதாகவும், வாடிக்கையாளர்கள் அதிக தொகையை டிப்ஸ் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பல பயணிகள் புகார் கூறுகின்றனர்.
டிப்ஸ் என்பது ஒரு நல்ல சேவைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் விரும்பி தருவது. ஆனால் சேவையைப் பெறுவதற்கு முன்கூட்டியே கட்டயாப்படுத்தி கேட்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற நிறுவனங்களும் நியாமான தொகையை ஓட்டுனர்களுக்கு தரவேண்டும். முக்கியமாக வாடிக்கையாளர்கள் புகார் அளிப்பதை எளிமைப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
