விமானப் பராமரிப்பு துறையில் துல்லியம், பாதுகாப்பு மிகவும் முக்கியமானவை என கோவை நேரு ஏரோனாடிக்ஸ் மற்றும் அப்லைடு சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வரவேற்பு விழாவில் அறியுறுத்தப்பட்டது.
கல்லூரியில் விமானப் பராமரிப்பு பொறியியல் துறைக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
துபாயில் உள்ள சர்வதேச விமான நிறுவனத்தில் உரிமம் பெற்ற மூத்த விமானப் பொறியாளர் உன்னிகிருஷ்ணன் சிறப்பு தலைமை விருந்தினராகவும், ஹைதராபாத்திலுள்ள ஜி.எம்.ஆர். ஏரோ டெக்னிக் நிறுவனத்தில் விமானப் பராமரிப்பு நிபுணராகப் பணியாற்றும், நேரு கல்லூரியின் முன்னாள் மாணவர் தினேஷ் ராம் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
விமானப் பராமரிப்பு துறையில் துல்லியம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானவை என வலியுறுத்திய அவர்கள், ஒவ்வொரு பாகமும் துல்லியமாக பராமரிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு விமானமும் பாதுகாப்புடன் பறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
நிகழ்வில் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக இயக்குநர் நாகராஜா, கல்வி விவகாரங்களுக்கான டீன் பாலாஜி, பயிற்சி மேலாளர் ரமேஷ் பாபு, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
