கோவையில் அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் கோழி வளர்ப்பு விவசாயிகள், வளர்ப்பு கூலியை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் 7 ஆண்டு காலமாகவே கறிக்கோழி வளர்ப்பிற்கு ஒரு கிலோவிற்கு 6.50 ரூபாய் முதல் 7.50 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப வளர்ப்பு கூலியை உயர்த்தி தர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் அரசு, பண்ணையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிராய்லர் கோழி நிறுவனத்தினர் அதற்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள், அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

இதில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்,

உடனடியாக தமிழ்நாடு அரசு கறிக்கோழி நிறுவனங்கள் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்.

கறிக்கோழி வளர்ப்பிற்கு அடிப்படை கூலியாக கிலோவிற்கு 20 ரூபாய், பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு கிலோவிற்கு 25 ரூபாய், காடை வளர்ப்பிற்கு ஏழு ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டணம் இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். சூரிய மின் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களுக்கு யூனிட் டூ யூனிட் அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு இதற்கென நல வாரியம் அமைத்திட வேண்டும்.

நிறுவனங்கள் வெளி நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்கி கோழிக்கு கொடுப்பதற்கு, விவசாயிகளை நிர்பந்தம் செய்யக்கூடாது.

கோழிகளுக்கு ஊசி மற்றும் கண் மருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவை நிறுவனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கோழி பண்ணையில் அடியில் விரிக்கும் பேப்பர், தென்னை நார்மஞ்சு, நிலக்கரி உள்ளிட்டவற்றை நிறுவனங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.