பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக கல்லூரி மைதானத்தில் புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர். மேலும், பொங்கல் விழாவை மையமாகக் கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் செயலர் கண்ணையன், முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர்கள், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
