ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநரும், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலருமான கவிதாசன் சிந்தனைகளை, ஓய்வு பெற்ற இந்தி மொழி ஆசிரியர் விஜயகுமார் ‘மன் கி தீபக்’ (உள்ளத்தின் ஒளி) என்ற தலைப்பில் இந்தி மொழியில் நூலாக்கம் செய்துள்ளார்.

சிறப்பு விருந்தினராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கவேத்திரங்கன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்: எந்த மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ளுங்கள். எவன் ஒருவன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்கிறானோ, அவனே வெற்றியாளன். லட்சியத்தை அடையப் பாதைகள் தேவையில்லை, காலடி எடுத்து வைக்கும் பாதங்களே போதும் என்று பேசினார்.

தலைமையுரையில் கவிதாசன் பேசுகையில்: எத்தனை மொழிகள் முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். பாரதியாரும் பல மொழிகளைக் கற்றவர். ஆனால், அத்தனை மொழிகளையும் அறிந்த பிறகுதான் அவர் சொன்னார்: ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’. தாய்மொழியில் சிந்திப்பதே உண்மையான ஆற்றல் எனப் பேசினார்.

விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலாகிரேஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.