கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூலகத்திற்கு அடிக்கல் நாடினார். ரூ.300 கோடி மதிப்பில் 6.98 ஏக்கர் பரப்பளவில்7 தளங்களில் 1,98,000 சதுர அடி பரப்பளவில் இந்த திட்டம் அமைக்கப்பட உள்ளது. மொத்த பட்ஜெட்டில், கட்டுமானப் பணிகளுக்கு ரூ.245 கோடி, புத்தகங்கள் மற்றும் மின் புத்தகங்களை வாங்குவதற்கு ரூ.50 கோடி, டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 30% கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பருவமழை நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு முடிந்தவரை கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மையம் அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இதில் விண்வெளி விண்கல அனுபவத்தை வழங்கும் வகையில் தனித்துவமான லிப்ட் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில், தரைத்தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம் இருக்கும். முதல் தளத்தில் அறிவியல் மையம் வசதிகள் அமையும். இரண்டாவது தளம் குழந்தைகள் நூலகம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான பிரிவு இருக்கும்.
3வது தளம் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம் செயல்படும். 4வது தளத்தில் தமிழ் இலக்கிய பிரிவு இருக்கும். இதில் பார்வையாளர்கள் தங்கள் சொந்த புத்தகங்களை கொண்டு வந்து படிப்பதற்கும் ஒரு பகுதி அமையும்.
5வது தளத்தில் தமிழ் இலக்கியத் தொகுப்பு, இன்குபேஷன் சென்டர் இருக்கும். 6வது தளத்தில் பத்திரிகைகளின் பதிப்புகள் சேமிப்பு, இன்குபேஷன் சென்டர் இருக்கும். 7வது மாடியில் அறிவியல் மையக் கண்காட்சிகள், ஆங்கில இலக்கியப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் இடம்பெறும்.
